flashvortex

Friday, September 23, 2011

கிராமியங்களில் களைகட்டும் காவடி

                    தொன்மை மிக்க மதமாக இந்து மதம் விளங்குகின்றது. இத்தகைய பெருமை வாய்ந்த சைவ சமயத்துக்கும் காவடிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கிராமிய கலை வடிவங்களாக கோலாட்டம், கரகாட்டம், செம்புநடனம், கும்மியாட்டம்,காவடி என்பன உள்ளன. இவற்றில் காவடி பற்றி நோக்குவது சிறப்பானதாகும்.


                   மாயோனும் சேயோனும் தொல்காப்பியத்தை கண்டுரைத்த பின்னரே காவடி என்ற பதம் உருவானது. காவூதடி என்ற பதம் மருவி காவடி என்ற பதமாக தோற்றம் பெற்றுள்ளது. காவடி பற்றி மறைமலைஅடிகளார் பல கருத்துக்கனை முன் வைத்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் ஆதிவாசிகள் விலங்குகளை வேட்டையாடி காவுதடியில் கட்டி எட்டிய தூரம் வரை கொண்டு சென்றுள்ளார்கள். பாரம் தூக்கியாக பாவித்த காவு+தடியே காலப்போக்கில் முருகன் ஆலய பால் காவடியாக உருவம் பெற்றுள்ளது. 

                  காவடி என்ற ஆட்டக்கருவியை தோளில் சுமந்து கொண்டு நாதஸ்வர மேளத்தின் இசைக்கேற்ப ஆடப்படும் ஆட்டம் காவடியாட்டம் எனப்படுகின்றது. முதன்முதலில் காவடியை இடும்பன் எடுத்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன. இக்கதை முருகனருள் என்ற புராணக்கதையில் உள்ளது. காவடி எடுக்கும் போது பக்தர்கள் விரதம் அனுஸ்ரிப்பார்கள்.



                 காவடியின் இரு முனைகளிலும் மயிலிறகு கட்டி நாகபடத்தை நாவிலும் அலகிலும் குத்தி செடில் ஏற்றி கயிற்றால் பிடித்து மேளம் நாதஸ்வரத்துடன் பாடல் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வீதியிலே பவனி வருகின்றது. பெணகள்; தலையிலே பாற் செம்பு தூக்கிக் கொண்டு காவடிகளுடன் செல்வார். நேர்த்திக் கடனுக்காக ஆரம்பித்த பாற்காவடி பலவித வடிவமும் ஆட்டமும் பெறத் தொடங்கியது. பின்னைய காலங்களில் எங்கே முருகன் ஆலயம் இருக்கின்றதோ அங்கே காவடி என்றிருந்தது. ஆனால் இன்று கோயில்களில் உற்சவம் என்றால் அங்கே காவடிகளை காணமுடியும். 
                    பாற்காவடி, பன்னீர்க்காவடி என்று ஆரம்பித்த காவடிகள் இன்று பறவைக்காவடி, தூக்குக்காவடி, சந்தனக்காவடி, மச்சக்காவடி, மயில்க்காவடி, சர்ப்பக்காவடி என்று பல வகை உள்ளன. இக்காவடிகள் உலகம் முழுவதும் விரிந்தது நேர்த்தியினாலேயே ஆகும். காவடியாட்டம் முருகன் கோயிலில் மட்டுமன்றி எல்லாக் கோயிலிலும் நேர்த்திக்காக எடுக்கப்படுகின்றது. அதிலும் அம்மன் ஆலயங்களில் பொங்கல் நேரங்களில் அதிகமான காவடிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
                       காவடிகளை அளவெட்டி, குரும்பசிட்டி, இணுவில், சுழிபுரம், தாவடி, மீசாலை,வடமராட்சி போன்ற இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
           இதைத்தவிர இந்தியாவில் அறுபடை முருகன் கோயிலில் அதிகமான பக்தர்கள் தம் நேர்த்திக்கடன்களை காவடி மூலம் செலுத்துகின்றனர்.                                காவடிகள் தனியே நாதஸ்வரத்துடனும் மேளத்துடனும் ஆடப்படுவதில்லை. பறைமேளத்துடனும் ஆடப்படுகின்றன. உதாரணமாக சன்னதி முருகன் கோயிலில் காவடிகள் பறைமேளத்துடனும் ஆடப்படுகின்றன. 

                    தூக்குக்காவடி எனப்படுவது முற்செடில்களை ஒருவரின் முதுகில் குத்தி பின் வண்டியொன்றின் மீது ஏற்றி அவரை சுமந்து ஊர்வலம் அழைத்துச் செல்வதாகும். இக்காவடி வீதிவழியே வரும் போது பக்திப் பாடல்களை ஒலிபரப்பு செய்து கொண்டு வருவார்கள். அதுமட்டுமல்லாது காவடிகள் எடுக்கும் போது பக்தர்கள் தமது நேர்த்திக் கடனுக்கேற்ப செடில்களை தமது உடலில் ஏற்றிக் கொள்வார்கள். பாற்காவடியை இளம்வயதினரில் இருந்து பெரியவர்வரை அனைவராலும் ஆடப்படும். 
                 காவடிகளை ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் எடுப்பது குறிப்பிடத்தக்கது. 
                    இன்று பாடசாலைகளிலும் முக்கியவிழாக்களிலும் ஊர்வலங்களிலும் மேடை நிகழ்வுகளிலும் காவடியாட்டம் வளர்ந்திருப்பது பாரம்பரிய கலைகளின் உயிரோட்டத்துக்கு வலுச் சேர்க்கின்றது என்றால் மிகையாகாது. 

Sunday, August 28, 2011

சிந்திக்க சில நிமிடங்கள்

            இயற்கையாகவே கறையான்களுக்கு கண் தெரியாது.ஆனாலும் சில இடங்களில் 40அடி உயரமுள்ள புற்றுக்களைக் கூட எழுப்புகின்றன. இயற்கையிலேயே காது கேட்காத ஒரே விலங்கு பாம்பு.இது ஓசைகளை அதிர்வின் மூலம் உனர்கின்றது. ஒட்டகத்தினால் ஒலியை எழுப்ப முடியாது. ஆனால் இவைகள் எல்லாம் எவ்வளவு திறமையாக தொழிற்படுகின்றன. 
       இவ்விலங்குகள் எல்லாம் இயற்கையாகவே இப்படிப் படைக்கப்பட்டுள்ளன.  அதனால் அவை சூழலுக்கேற்ப இசைவாக்கம் பெற்று விட்டன. ஆனால் ஒரு மனிதனுக்கு பார்வையின்மை அல்லது காது கேளாமை அல்லது வாய் பேச முடியாமை போன்ற குறைபாடுகள் ஏதேனும் ஏற்ப்பட்டால்...............? !பெரும்பாலானோர் “எம்மால் பேச முடியாது என முடங்கி விடுகின்றனர்.  அவ்வளவு ஏன்?  அங்கவீனம் ஏதும் அற்றவர்களே முயற்சி இன்மை, ஆர்வம் இன்மை ,அவநம்பிக்கை என்பவற்றால் தம்மிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த தவறுகின்றனர்.

         ஒவ்வொருவரிடமும் நிச்சயமாக ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஆனால் பலர் தம்மிடம் உள்ள திறமைகளை உணர்வது இல்லை. உணர்ந்தாலும் சரியாக வெளிப்படுத்துவது இல்லை.

           அங்கத்தில் குறைகளோடு பிறந்தாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் வாழ்வை வென்றவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், இருந்தார்கள். பிறவிக் குறைகள் உள்ளவர்கள் ஒரு வகை என்றால் விபத்துக்கள், நோய்களால் குறைபாடுகளை சந்தித்தவர்களும் சாதித்திருக்கிறார்கள். இவர்கள் எமக்கு சிறந்த வழிகாட்டிகள். 
           சபர சாஸ்திரி, துவாரம் வெங்கடசாமி, வில்லியம் பிரஸ்காட் ஆகிய மூவரும் எதிர் பாராத விதமாகத் தமது விழிப்புலனை இழந்தவர்கள். சபர சாஸ்திரி இந்தியாவில் சிறந்த புல்லாங்குழல் மேதையாக விளங்கினார். இவர் சிறு வயதில் அம்மை நோய் வந்ததால் பார்வையை இழந்தார். துவாரம் வெங்கடசாமியும் சிறு வயதில் அம்மை நோய் வந்ததால் பார்வையை இழந்தார். இந்தியரான இவர் சிறந்த வயலின் மேதையாக விளங்கினார். வில்லியம் பிரஸ்காட் சட்டம் படித்தார். வழக்கறிஞராக வேண்டியவர் விபத்தில் பார்வையை இழந்தார். பின் ஒரு காரியதரசியின் துணை கொண்டு பல இலக்கிய நூல்களையும், வரலாற்று நூல்களையும் கற்றறிந்து பெரும் தேர்ச்சி பெற்றவர். பல வரலாற்று நூல்களை எழுதிப் புகழ் பெற்ற வரலாற்றாசிரியராகத் திகழ்ந்தார். 
          இங்கிலாந்தை சேர்ந்த கென்றிப்பாசெட் பார்வை அற்றவர். திறமையாகக் கல்வி கற்று கேம்பிரிட்ஜில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார். அரிய பல நூல்களை எழுதினார். பொதுத் தபாலதிபர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்திருக்கின்றார்.
        வாழ்வில் வெற்றி பெற ஊனம் ஒரு தடையல்ல..............

Friday, August 19, 2011

பாடசாலைகளில் தமிழ்ப்பாட சித்தி வீதத்தில் வீழ்ச்சி


 மாணவர்களின் வாழ்க்கை பயணத்தில் திருப்புமுனைக் கட்டமாக க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை அமைகின்றது. இதில் சித்தி அடைவதன் மூலமே எதிர்காலத்தை சிறப்பான முறையில்அமைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் பலர் இதில் சித்தியடையத் தவறுகின்ற நிலை காணப்படுகின்றது.


 கடந்த காலங்களில் க.பொ.த.சாதாரணதரத்தில் கணிதம் என்ற பாடம் மட்டுமே சித்தியடைவதற்கு பிரச்சனைக்குரிய பாடமாக இருந்தது. தாய்மொழியை தமிழாகக் கொண்டிருக்கும் யாழ்பாணத்தில் அனேக மாணவர்கள் தமிழ்ப் பாடங்களில் 'C' தரச் சித்திக்கு மேற்படவே பெற்று வந்தனர்.

 ஆனால் அண்மைக்காலமாக இந்நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் பாடத்தில் மாணவர்களின் அடைவு மட்டம் வீழ்ச்சி கண்டு வருகின்றது. அதிலும் இறுதியாய் நடந்த பரீட்சையில் தமிழ் பாடத்தில் மாணவர்களின் சித்திவீதம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதையும் தமிழில் 'A' தரத்தை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து 'S' தரச் சித்தியை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாக காணப்படுகின்றன.

2010ம் ஆண்டு சில பாடசாலைகளில் தமிழ்பாட சித்தி வீதத்தை எடுத்துக் கொண்டால்

யா/புற்றளை  மகா வித்தியாலயத்தில்

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் - 30

A தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 03

B தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 03

C தரச்சித்தி பெற்ற மாணவர்கள் - 05

S தரச்சித்தி பெற்ற மாணவர்கள் - 11

W பெற்ற மாணவர்கள் - 08


யா/கொட்டடி நமசிவாய வித்தியாலயம்

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் - 30

A தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  -01

B தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 04

C தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 07

S தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 09

W பெற்ற மாணவர்கள் - 09


யா/தெல்லிப்பளை மகாயனக் கல்லூhயில்

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் - 84

A தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 14

Bதரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 13

C தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 30

S தரச்சித்தி பெற்ற மாணவர்கள்  - 21

W பெற்ற மாணவர்கள் - 06


  இன்று A தரச் சித்தி பெறும் மாணவர்கள் அருகி S தரச் சித்தி பெறும் மாணவர்களும் சித்தியடையாத மாணவர்களுமே அதிகமாக காணப்படுகின்றனர்.

  இதற்கு காரணம் மாணவர்களா? ஆசிரியர்களா? அல்லது புதிய வினாத்தாளின் வினாக் கட்டமைப்பு முறையா? வினாத்தாள் திருத்தப்படும் முறையா? ஏன பல கேள்விகள் எழுகின்றன.

தமிழ்ப்பாட வீழ்ச்சிக்கு காரணம் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கம் இல்லை என்பதுடன் அவர்கள் ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களையே படிக்கின்றனர் மாணவர்கள் தேடிக்கற்பதில்லை என யா/ புற்றளை மகா வித்தியாலய தமிழ்ப்பாட ஆசிரியர் திருமதி பிருந்தா சதீஸ்குமார் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மாணவர்கள் வீட்டுச்சூழல் காரணமாகவும் படிப்பதில்லை எனவும் தமிழில் சரியாக எழுதத்தெரியாத மாணவர்கள் இப்போதும் இருக்கின்றனர் எனவும் கூறினார்;. இம் மாணவர்களுக்கு தனியான கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் கூறினார்.

  ஆங்கிலம் உட்பட வேறு சில கடினமான பாடங்களில் உயர் சித்தி பெறும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் உயர்சித்தி பெறத் தவறுகின்ற நிலை காணப்படுகின்றதே என வினாவிய போது தமிழ்ப் பாடப்பரப்பு அதிகமாக இருப்பதனால் தமிழ்ப்பாடத்தில் உயர் சித்தி பெற மாணவர்கள் தவறுகின்றனர் என திருமதி. பிருந்தா சதீஸ்குமார் கூறினார்.

தமிழ் ஆசிரியர் திரு.நந்தகுமார் குறிப்பிடுகையில்   5E என்ற புதிய கல்வித்திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்டு புதிய வினாத்தாள் அமைப்பு என்ற வகையில் கடந்த இரு வருட க.பொ.த சாதாரணப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதற்கு முந்திய காலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்ப்பாட சித்தி வீதமானது குறைவடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

  இன்றைய மாணவரிடம் ஒரு விடயத்தை நீண்டு தொகுத்துச் சொல்லும் ஆற்றல் குறைந்து எதனையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றலே காணப்படுகின்றது. ஆசிரியர்களிடம் இருந்தும் மாணவர்கள் இதனையே எதிர்பார்க்கின்றனர். இதுவும் அவர்களது மொழி ஆட்சி மொழித்திறன் ஆற்றல் குறையக் காரணமாகின்றது அத்துடன் பல மாணவர்களிடம் எழுத்துப்பிழை எழுத்தை உறுப்பின்றி எழுதுதல் போன்ற விடயங்களையும் அவதானிக்க முடிகின்றது. பெற்றோரும் முன்பள்ளி ஆசிரியர்களும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களும் திருத்தாது விட்ட இத்தகைய தவறுகளையும் அதற்கான குற்றத்தினையும் கூட தமிழ்ப்பாட ஆசிரியர்களே சுமக்க வேண்டியுள்ளது என திரு.நந்தகுமார் குறிப்பிட்டார்.

அதிகமான நூல்களை வாசிக்க செய்வதன் ஊடாகவும் சில விசேட செயற்திட்டங்களினூடாகவும் இப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம்.    அவர் மேலும் குறிப்பிடுகையில் தொலைக்காட்சியின் ஆதிக்கம்இ பிறமொழிக்கலப்பு பெற்றோரின் போதிய கவனிப்பின்மை புலமைப்பரிசில் பரீட்சையை மட்டும் மையப்படுத்திய திணிப்புக்கள் போதியளவான வாய்ப்புக்கள் வழங்கப்படாமை போன்றனவும் கூட இந் நிலைக்கு காரணமாக அமையலாம்.          

இன்றைய மாணவர்கள் அதிகநேரத்தை கணணியுடனேயே செலவிடுகின்றனர் அதிலும் குறிப்பாக கணணியில் விளையாடுவதற்கே செலவிடுகின்றனர் இதுவும் அவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு தடையாக இருக்கின்றது.

மாணவர்களிடம் இன்று மொழியாற்றல் பேச்சாற்றல் போன்றனவும் குறைவடைந்து வருகின்றன. இதற்கு அவர்கள் நிறைய நூல்கள் படித்தல் அவசியமானது.அத்துடன் அவர்கள் கட்டுரைகள் கவிதைகள் போன்றவற்றை எழுதி தமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் இருந்த வினாத்தாள் அமைப்பிற்கும் இப்போது இருக்கும் வினாத்தாள் அமைப்பிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. குறிப்பாக பகுதி 2பகுதி 3ல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறுவினா அமைப்புக்கள் மாணவர்களை அதிகமான புள்ளிகளை இழப்பதற்கான வாய்ப்பாக அமைகின்றன. இலக்கணப் பகுதிகள் இப்பொழுது அதிகமாக காணப்படுவதாலும் மாணவர்களின் புள்ளி இழப்பு அதிகமாகக் காணப்படுகின்றது என தெல்லிப்பளை மகாயன கல்லூரியின் தமிழ்ப்பாட ஆசிரியர் தெரிவித்தார்.

வினாக்களை விளங்கி அதற்கேற்ப சிந்தித்து விடைகளை எழுத மாணவர்கள் பழக வேண்டும் மாணவர்கள் தங்களை முயற்சி பயிற்சி ரீதியாக தயார்ப்படுத்திக் கொள்வதும் தமிழாசிரியர் எதிர்காலத்தில் தமிழ்ப்பாடசித்தி வீதத்தை அதிகரிப்பதற்காக தம்மாலான செயற்பாடுகளை மேற்கொள்வதாலும் தமிழ் பாடத்தில் சித்தி வீதத்தை அதிகரித்துக் கொள்ளலாம்

தகவல் -சுகனியா,மிருஷா

Monday, August 15, 2011

விமானங்கள்,மருத்துவமனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ?

நாம் அதிகமான இடங்களில் மின்காந்த குறுக்கிடுகளை அவதானித்திருப்போம் அல்லவா?

உதாரணத்திற்கு நாம் கணனிக்கு முன்னால் இருந்து வேலை செய்யும்போது அலைபேசியில் அழைப்பு வந்தால் உடனே கணனி ஒலிபெருக்கியில் ஒரு குறுக்கீடு உண்டாவதை பார்த்திருப்போம்.......


இவை ஒரு பயங்கர பிரச்சனை என்று கூறுவதற்கு இல்லை.எனினும் இதே பிரச்சனை விமானத்தில் வந்தால் எவ்வாறு இருக்கும் தெரிமா?

பொதுவாக ரேடியோ அலைகள் மூலம் இயங்கும் அனைத்து சாதனங்களும் ரேடியோ என்றே அழைக்கப்படும்.........


நாம் அன்றாட வாழ்வில் பாட்டு கேட்க பாவிக்கும் ரேடியோக்களில் 2 வகை உண்டு.
 1 .fm redio - frequency modulated redio -  மீடிறன் மட்டிசைக்கப்பட்டது
  2. Am redio - Amplitude modulated redio- வீச்சம்  மட்டிசைக்கப்பட்டது


ஒரு விமானத்தில் வெவ்வேறு  காரணங்களுக்காக அதிகமான வானொலி ஒலிபரப்பு  சாதனங்கள் காணப்படும்....உதாரணமாக, விமானிகள் விமான கட்டுப்பாட்டு மையத்துடன் பேசிக்கொள்ள ஒரு வானொலி ஒலிபரப்பு சாதனம் உண்டு.
அதேபோல்  விமானங்கள் தங்கள் நிலையை ATC கணனிகளுக்கு (Air Traffic Control Computers ) தெரிவிக்க ஒரு வகையான வானொலி உண்டு..... காலநிலையை அறிய ரேடார் கருவிகள் உண்டு......இவை அனைத்து வானொலி சாதனங்களும் தமக்குடிய மீடிறன்களில் வேலை செய்யும்.( Specific Frequency)
இப்படி இருக்கையில் யாரவது தங்கள் தொலைபேசியை பாவிக்க முற்பட்டால் அது உயர் சத்தியை கடத்தும்.( up to 3 watts). இதன் போது வெளியேறும் அலைகளானது விமானத்தில் இருந்து அனுப்பப்படும் அலைகளின் மேல் பொருந்துகையடைய முற்படும்.
இதனால் விமானத்தில் இருந்து அனுப்பப்படும் செய்திகள் குழப்பம் அடையும்.  அப்போது விமானத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வடம் ( Wire) சிறிதாவது சேதமடைந்திருந்தால் அது கணனி ஒலிபெருக்கிகள் போல இந்த அலைகளை பெற்று விடும்......அதனால் தவறான செய்திகளே கட்டுப்பாட்டு மையத்தை அடைய வாய்ப்புக்கள் உண்டு..............

அதிகமான மருத்துவமனைகளில் வடமில்லா வலையமைப்புடன் (wireless network) கூடிய சாதனங்களே   தற்போது அதிகமான சாதனங்களின் அன்டெனாவானது Nursing station உடன் Wireless network மூலமே இணைக்கப்பட்டுள்ளது...............   

இந்த நிலைமையில் நாம் தொலைபேசியை பாவித்தோமானால் வரும் அலைகள் இந்த அலைகளுடன் மேற்பொருந்துகையடைய  முற்பட்டு தவறான செய்திகளே சென்றடையும்............   

தொலைபேசியை பாவித்தால் மட்டும் இப்படி நடக்க வாய்ப்புக்கள் உண்டு என எண்ணுவது தவறு.....
சாதாரணமாக செல்லிடத் தொலைபேசிகள் தங்கள் சேவை வழங்குனர்களுடன் ஒரு தொடர்பை   எந்நேரமும் வைத்துக் கொண்டே இருக்கும்.
இதன் காரணமாக வரும் அலைகளும்  இந்த பிரச்சனையை உண்டாக்க வாய்ப்புக்கள் உள்ளது.

எனவே மருத்துவமனைகளில் நாம் எமது செல்லிடத் தொலைபேசிகளை அணைத்து வைப்பது நல்லது...........    


ஒழுங்காக காவலிடப்படாத லாப்டாப்புக்களும் CD பிளேயர்களும் இதே பிரச்சனையை விமானங்களில் ஏற்படுத்தும். அவற்றில் இருந்து சிறியளவான அலைகள் தெறிப்படைவதே இதற்கு காரணம்.

எனவே மருத்துவமனைகள், விமானங்கள்,எரிபொருள் நிலையங்கள் என ஆபத்தான இடங்களில் நாம் எமது செல்லிடத் தொலைபேசிகளை அணைத்து வைப்பது சிறந்தது.

Monday, August 1, 2011

அம்மா

ஈரைந்து மாதங்கள் எனை தாங்கி பூமியிலே

ஈன்றெடுத்த தெய்வம் நீ...
பாலுட்டி சீராட்டி உன் உதிரத்தையேதந்து காத்தாய் நீ
என் மழலை மொழி கேட்க
எத்தனை காலம் காத்திருந்திருப்பாய்
என்னை வளர்த்திட நீ பட்ட
துயரங்கள்தான் எத்தனை ஆயிரம்
தாயே
உந்தன் நினைவுகளால்
ஏங்கித் தவிக்கின்றேன்..........




Sunday, July 17, 2011

வாகன நெருக்கடி

தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் யாழ் நகரை நோக்கி வாகனங்களில் வருவதனால் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வாகனங்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டு உள்ளன. வாகனங்கள் நிறுத்தத் தடை என்ற இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


   

Friday, June 3, 2011

21ம் நூற்றாண்டில் தாதியத்தின் எழுச்சி



  ஆதிகாலத்தில் இருந்தே ஏதோ ஒருவகையில் தாதியம் இருந்துள்ளது.பண்டைய காலத்தில் ஆதிகால மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தனர். சுகாதாரப் பிரச்சனை, குடிநீர்பிரச்சனை, நோய்களை எதிர்கொள்தல் போன்ற பல தரப்பட்ட பிரச்சனைகளால் அவதியுற்றனர்.எனவே தொற்றுநோய்களில் இருந்து விடுபடவும் சுகாதாரமான வாழ்கை முறையினை ஏற்படுத்திக் கொள்ளவும் முனைந்தனர். ஆகையால் தமது வாழ்வாதாரத்தில் வளர்ச்சி படிமுறைகளை நோக்கி பயணித்தனர். இப்பயணத்தின் பக்கபலமாகஇருந்ததே தாதியம். முற்காலத்தில் இது ஒரு தொழிலாக காணப்படவில்லை மாறாக இது ஒரு கலையாகவே காணப்பட்டிருந்தது. பிற்காலத்தில் தாதியத்தின் தேவை அதிகரித்தமையால் அது தொழில் ரீதியாக வளர்ச்சியடைந்து விஞ்ஞானரீதியில் பல படிமங்களாக வளர்ந்து வைத்தியத்துறையும் தாதித்துறையும் வளர்ச்சி கண்டது.

     தாதியத்தில் பொதுவாக பெண்களே அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் பெண்களுக்கு மென்மைத்தன்மை இருக்கும்இ ஓர் நோயாளியை பெண்ணே கவனமாக பாராமரிப்பாள் என்று கருத்து நிலவுகின்றது. ஆயினும் தொழில் ரீதியாக தாதியம் வளர்ச்சியடைந்த காரணத்தினால் தற்காலத்தில் ஆண்களும் தாதியத்தில் ஈடுபடுவதை காணமுடிகின்றது. 
     ஆரம்ப காலத்தில் தாதியமும் வைத்தியமும் பல நாடுகளில் இருந்ததாக அந்த நாட்டை ஆண்டமன்னர்களின் முலம் அறிந்து கொள்கின்றோம். ஏனெனில் மன்னர்கள் வைத்தியத்துறைக்கு பல ஆதரவுகளை வழங்கி இருந்தமையை வரலாறுகளின் முலமாக அறிய முடிகின்றது. பண்டைய மருத்துவ முறைகளை பின்பற்றியே தற்கால மருத்துவமுறை வளர்ச்சியடைந்துள்ளது. சமயமுறைகளிலும் தாதியம் தொடர்பான கருத்துக்கள் பின்பற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காக கத்தோலிக்க  திருச்சபையிலே தாதியப் பணிக்கென்று துறவறசபைகள் உள்ளன. 'அன்னைதெரேசாசபை' 'திருச்சிலுவைக்கன்னியர்சபை' இச்சபைகள் யாவும் வைத்திய தாதியப் பணியினையே பல நாடுகளிலும் ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. முற்காலத்தில்  சிலுவை யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பில் பல சுகாதாரக் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தன. வைத்தியசாலைகள் வைத்தியர்கள் தாதிகள் போன்ற பணிகளில் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால் ஆண்களும் தாதியத்தில் ஈடுபட முனைந்தனர். இவ் ஆண்களின் கூட்டமைப்பு இராணுவ தாதியக் கட்டளை எனப்பட்டது. இவ் முயற்சியே தற்காலத்தில் ஆண்களும் தாதியத்தில் ஈடுபட உந்துதலாக அமைந்திருந்தது. 
       தாதியத் தொழிலானது ஆரம்பகாலத்தில் இருந்து புண்ணியமான கருதப்பட்டுவருகின்றது. தாதியத் துறவிகளுள் பிரபல்யமானவர்களாக சென்கில்டேகரட்இ சென்எலிசபத்இசென்கதரின் ஆகியோர் திகழ்ந்தனர். இவர்கள் நோயாளர்கள் கண்பார்வையற்றோர் முடமானோருக்கு சேவை செய்தனர். தாதியத்தின் உன்னதபணி புளோரன்ஸ் என்னும் பெண்ணுடனேயே ஆரம்பமாகியது.இதனால் இப் பெண்மணி புளோரன்ஸ் நைற்றிஸ் கேள் என அழைக்கப்பட்டார்.



        தாதியர்கள் வைத்தியர்களை விட உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் ஏனெனில் வைத்தியர்கள் நோய்களை அறிந்து அதற்கான சிகிச்சையை முறைகளை மட்டுமே கூறுவார். ஆனால் தாதியர் நோயாளியாக மாறி அந்த நோய் மாறும் மட்டும் அவர்களுக்காகவே செயற்படுவார்கள். 

        தாதியக்கல்வி இன்று டிப்ளோமா கற்கைநெறியாக அங்கீகரிக்கப்பட்டு பல வகையில் தாதியம் பிரிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் பற்தாதியம்இ காசநோய் தாதியம்இ உளத்தாதியம்இசிறுவர்தாதியம் இ சிறுநீரகவியல்தாதியம் இநரம்பியல் சத்திரசிகிச்சை தாதியம்இமுறிவுநெறிவு தாதியம்இமருத்துவ மாதர்இகுடும்பநலதாதியம்இஅடிப்படைக்கு பின்னான தாதியம்இபயிற்சிக் கல்லூரி தாதியம் இதாதியத்திற்கான பல்கலைக்கழககல்வி இ தாதியத்தின் ஆண்கள்இதாதியத்தில் ஆயுதபடை இதுணைத்தாதியம் இஉதவித்தாதியம்இஅறுவைச் சிகிச்சை தாதியம்இ போன்ற வகையில் தாதியம் பல்கிப் பெருகி வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது.
         கடமை உணர்வு சாதாரணமாக குடிமகனுக்கு இருப்பதில்லை. தனது உறவுகளுக்கும் உதவிபுரிவதில்லை. ஆனால் தாதிகள் யார் என்றே தெரியாதவர்களுக்கும் உறவாக எண்ணி உதவி புரிகின்றனர். தாதிகள் பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தினால் தற்காலத்தில் அதிகளவான மாணவர்கள் உள்வாங்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு தாதிகளாக நியமிக்கப்படுகின்றனர். தாதிகள் பணத்துக்காக மட்டுமின்றி சமூக சேவைகளிலும் செயற்படுகின்றனர். 
        பிள்ளைகள் கூட தமது பெற்றோர்களை நோயற்ற வேளைகளில் அருகில் இருந்து பராமரிப்பார்களா என்பது சந்தேகமான ஒரு விடயம். ஆனால் கடமையுணர்வுடன் அன்பையும் இணைத்து இரவு பகல் பாராது பராமரித்து அவர்களுக்கு துணையாக இருந்து நோய் தீரும்வரை தன் நலம் பாராது விழித்துக் காத்திருந்து துணையாக இருந்து துயர்துடைப்பவர் தாதியரே! அதிகரித்து வரும் நோய்களுக்கு கூட தங்களை இசைவுபடுத்தி மனத்துணிவுடன் சேவை புரிகின்றார்கள். நித்திரையை விடுத்து தமது அன்றாட கருமங்களை விடுத்து இரவு பகல் சேவை புரிகின்றனர்.
         தாதியர்கள் பல தரப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.அதிகரித்துவரும் குடித்தொகைஇவீதிவிபத்துக்கள்இ கட்டடவசதிகள் குறைவுஇநிதிப்பற்றாக்குறைஇவைத்தியர் பற்றாக்குறைஇ ஊழியர் பற்றாக்குறைஇஉபகரணங்கள் போதமைஇதாதியருக்குரிய விடுதிகள் போதாமை போன்ற காரணங்களினால் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. தாதியர்கள் எதிர்நோக்கும் சாவல்களுக்கு தீர்வுகாண முடியாது. ஆனால் தீர்வுகாண வேண்டியதற்கு தீர்வு கண்டால் நவீனயுகத்தில் தாதியரின் பணி சிறப்பாக அமையும். தாதியப் பணியிலே ஆண்களையும் பெண்களையும் அதிக எண்ணிக்கையிலே தெரிவு செய்வதின் மூலம் நோயாளிகளை பராமரித்தல் இலகுவாக இருக்கும். 
          கட்டட வசதிகளை ஏற்படுத்தி நோயாளர்களுக்கு தொற்றுநோய் உண்டாவதனை தடுக்க முடியும். வைத்தியர்களை அதிகம் நியமிப்பதன் மூலமும் நோயாளர்களை அடிக்கடி பரிசோதிக்க முடியும்;. வீதிகளில் அதிகளவான காவல்துறையை கடமைக்கு அமர்த்துதல் மூலமும் நவீன வகையான உபகரணங்களை வழங்குதல் மூலமும் மிக விரைவாக சிகிச்சை அளித்தல் போன்றவற்றினூடாக சவால்களை எதிர்கொள்ள முடியும்.
         தற்காலத்தில் தாதியத்தின் உன்னதசேவை அவசியமானதொன்றாகும். சவால்களை கடந்தும் உன்னத பணியில் தம்மை இணைக்கும் தாதியர் சேவையை தரமுயர்த்துதல் அவசியமானதொன்று. ஆயினும் தாதியரில் தம்மை இணைக்கும் பணிக்கு இன்று அதிகளவான இளைஞர் யுவதிகள் ஈடுபடுவதனை காணமுடிகின்றது. பல்கலைக்கழக பட்ட நெறிக்கு இட்டு செல்லும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவையே.

சுழல்பந்தின் நாயகன் முத்தையா முரளிதரன்


பல சாதனைகளின் நாயகனாகத் திகழும் முத்தையா முரளிதரன் 1972.4.17ம் திகதி பிறந்தார். இவர் இலங்கையணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரும், மலையகத் தமிழரும் ஆவார்.


டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களை எடுத்து உலக சாதனை புரிந்த முதல் வீரர் என்ற பெருகைக்குரியவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

    கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன் பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமைதாங்கி இருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளி அதே நேரம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னான்டோவின் ஆலோசனையின் படி சுழல்பந்து வீச்சை தொடங்கினார்.

     1990 - 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் பாட்டா ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற விருதினைப் பெற்றார். 1991ம் ஆண்டில் தமிழ் யூனியன் துடுப்பாட்ட கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட  வாழ்வை ஆரம்பித்தார்.




     இலங்கை அணிக்காக 1992ம் ஆண்டு  முதல் டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டியில் அவுஸ்ரேலியாவுக்கு எதிராகவும் 1993ல் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இந்தியஅணிக்கு எதிராகவும் காலடிஎடுத்து வைத்தார்


.

     1992ம் ஆண்டில் இருந்து  இலங்கையணியில் விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை 800 டெஸ்ட் இலக்குகளையும் 532 ஒருநாள் இலக்குகளையும் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.

      கிரிக்கெட் உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் பத்திரிகை 1999ம் ஆண்டில் உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனை தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

     2004ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக்  கொண்டார்.இதே ஆண்டில் ஆழிப்பேரலையில் இருந்து 20நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

     டெஸ்ட் அரங்கிலும், ஒருநாள் போட்டியிலும்  அதிக விக்கெட் வீழ்தியவர்களில் வரிசையில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

     டெஸ்ட் தகுதி பெற்ற நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008ம் ஆண்டு ஏப்ரல் மே ஜீன் மாதங்களில் 20ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.இந்த அணி இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

     350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 524ரண்களையும் 532 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்

     133 டெஸட் போட்டிகளில் விளையாடி 1அரைச்சதம் உள்பட 1156ரண்களை எடுத்து 800விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார்.



1992-2011.2.12 வரை


இதுவரை விளையாடியுள்ள உலககிண்ணகோப்பை - 40


       விளையாடிய இனிங்ஸ் - 11


       ஆட்டமிழக்காமை - 4

       ஓட்டம் - 62

       கூடிய ஒட்டம் - 16

       வீசிய பந்து - 1635

       கொடுத்த ஓட்டம் - 1044

       கைப் பற்றிய விக்கெட் - 68


இதுவரை விளையாடியுள்ள ஏகதேச தர போட்டி - 444

         விளையாடிய இனிங்ஸ் - 203

       ஆட்டமிழக்காமை - 75

       ஓட்டம் - 938

       கூடிய ஒட்டம் - 33

       வீசிய பந்து - 23308

       கொடுத்த ஓட்டம் - 14979

       கைப் பற்றிய விக்கெட் - 666


இதுவரை விளையாடியுள்ள சர்வதேச போட்டி - 350

         விளையாடிய இனிங்ஸ் - 160

       ஆட்டமிழக்காமை - 62

       ஓட்டம் - 667

       கூடிய ஒட்டம் - 33 (ஆட்டமிழக்காமல்)

       வீசிய பந்து - 18385

       கொடுத்த ஓட்டம் - 12035

       கைப் பற்றிய விக்கெட் - 532


இதுவரை முத்தையா முரளிதரன் இலங்கை, ஆசியலெவன், சர்வதேச கிரிக்கெட் வாரிய உலக லெவன், கண்டுரட்டஅணி, கெனட் இலாங்கஷயர், தமிழ்யூனியன் கிரிக்கெட் கழகம், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

      பல சாதனைகளை புரிந்த முத்தையா முரளிதரன் 22.7.2010 அன்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த முரளிதரன் 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண போட்டியில் விளையாடிய பின்னர் ஓய்வு பெற்றார். இவர் இலங்கை அணிக்காக 18 ஆண்டுகள் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

      முரளி ஓய்வு பெற்றமை இலங்கை அணிக்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். முரளியின் சாதனைகளை மிஞ்சுவதற்கு எவரும் வரப்போவதில்லை என்றால் மிகையாகாது.




Thursday, April 28, 2011

அம்மா










                                          நான் கருவறையில்
                                         இருந்த காலம் தொடக்கம்
                                         உன் இதயம் எனும்
                                        அன்புச் சிறையில்
                                        அடைபட்டு இருக்கின்றேன்
                                         உன் அன்புச் சிறையில்
                                        இருந்து வெளிவர நான்
                                        விரும்பியதுமில்லை
                                        விரும்பப்போவதுமில்லை
                                        எப்பொழுதும்..........
                                                                                   

Wednesday, March 23, 2011

broken heart

hai